⚠️ Trigger Warning: இந்த கவிதை பெண்களின் வலியை, சமூக அநீதியை, உடல் வன்முறையை உள்ளடக்கியது. கட்டாய திருமணம், பாலியல் வன்கொடுமை, சமூக ஒடுக்குமுறை — இவற்றை நேரடியாக எதிர்கொண்டவர்களுக்கு இந்த வார்த்தைகள் வலிக்கலாம். உங்கள் மனநிலையை கவனித்துக்கொண்டு படிக்கவும். உணர்வுபூர்வமான வாசகர்கள் கவனமாக படிக்கவும்.
இரவு உறங்கும் நேரத்தில்
சீண்டியது எனது பொம்மை.... பதறி எழுந்தேன்.
"என்னைக் கண்டு சிரித்தது ஏன்?" என்று கேட்டேன்.
"நீ பதறும் அளவு நான் மானிடன் அல்ல... உன்னைச் சிதைத்து
உன் வாழ்வை சீரழிப்பதற்கு..." என்றது.
"மிகவும் புத்திசாலியாகப் பேசுகிறாயே...!
உனக்குப் 'பெண்' என்று பெயர் சூட்டவா?" என்று கேட்டதற்கு,
என் சுதந்திர வாழ்வை முடக்கி, அடுப்பங்கரையில் அடைக்கப்பட்டு, கட்டாயத் திருமணத்தின் பெயரில், என் கனவுகள் புதைக்கப்பட்டு, என் விருப்பங்கள் புறக்கணிக்கப்பட்டு, என் வாழ்க்கையை பிறர் தீர்மானிக்கும் உலகில்
என்னை 'பெண்' என்று அழைக்கிறாயே..."என்றது.
இவையெல்லாம் உண்மைதானா
என்று அசைபோட்டுக்கொண்டே நடந்துச் சென்றபோது,
திடீரென்று...
ஒருவன் என்னை இழுத்துச் சென்றான். மயங்கிய நிலையில் கண்விழித்தேன்.
கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. என் உடலில் காயங்களின் தடங்கள் மட்டுமே இருந்தன.
என் பெண்மை காயப்படுத்தப்பட்டிருந்தது. பதறிய நான்...தப்பி ஓடினேன்.
தெரு நாய்கள் கூட்டமாக நின்று குரைத்துக்கொண்டிருந்தன. பயந்த என்னைக் கண்டு,
"நாங்கள் சொறிநாய்கள் தான்...
காமவெறிநாய்கள் அல்ல...
பயப்படாமல் செல்..."என்றன.
தஞ்சையில் தஞ்சம் அடைந்தபோது, தலையாட்டி பொம்மை மகிழ்ச்சியுடன் தலையாட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதனிடம் சென்று,
"கனவில்கூட நீ உனது உடையை மாற்றிவிடாதே...
உன் மதனபீடம் காயப்படுத்தப்பட்டதற்கும்...
உன் மதனநீர் கண்ணீராய் வழிந்ததற்கும்...
உன் பெண்மை சிதைக்கப்பட்டதற்கும்...
நீ உடுத்திய உடையோ...
உன் நடத்தைகளோ தான் காரணம் என்று... முடிசூட்டப்படுவாய்..." என்றேன்.
உன் உடலைக் காயப்படுத்தி... உன் உயிரையே சிதைத்து...
தன் காமத்தை வெற்றியாகக் கொண்டாடியவன்...
சட்டத்தின் ஓட்டைகள் வழியாக... சுதந்திரமாக நடமாடுவதை கண்ட உனக்கு...
மிதமாக வலிக்கிறதா...உன் மனதோரம்...?
கவலைக்கொள்ளாதே... உன்னை அவ்வாறு செய்தவன் இங்கு தப்பித்துவிடலாம். ஆனால்...
"இறைவன் பார்த்துக்கொள்வான்...
நரகம் அவனுக்குக் காத்திருக்கிறது..."
என்று கட்டுக்கதைகள் கேட்டபோது...
மிதமாக வலிக்கிறதா... உன் மனதோரம்...?
உன் தந்தை ஆசையோடும், உரிமையோடும் உன்னைக் கட்டிக்கொண்டாலும்கூட,
உன் பயம் எட்டிப் பார்க்கின்ற நொடிகளில்...
மிதமாக வலிக்கிறதா... உன் மனதோரம்...?
உன் வாழ்வை நினைத்து நீ அழுது கொட்டித் தீர்த்த முகப்பொழிவைக் கண்டு,
மழலைச் சிரிப்புடன் விளையாடும் பெண் குழந்தைகளைப் பார்க்கும் நொடிகளில்,
அவளுக்கும் இதே நிலைமை
ஒருநாள் எட்டிப் பார்த்துவிடுமோ...
என்று எண்ணியபோது...
மிதமாக வலிக்கிறதா...உன் மனதோரம்...?
கருவறையில்தான் பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடப்பதில்லை.
அங்காவது பாதுகாப்புடன் இருக்கிறாள் என்று எண்ணி மகிழ்ந்தபோது...
மிதமாக வலிக்கிறதா... உன் மனதோரம்...?
பெண்ணே...
மிதமாக வலிக்கிறதா... உன் மனதோரம்...?
இந்த உலகில் ஒரு பெண்ணாக பிறந்தது குற்றமில்லை — ஆனால் சமூகம் அதை குற்றமாக்குகிறது.
கட்டாய திருமணம், உடல் வன்முறை, சட்டத்தின் ஓட்டைகள் — இவை எல்லாம் இன்றும் நடக்கின்றன. இந்த கவிதை அந்த வலியை குரலாக்கும் ஒரு முயற்சி.
ஒரு பெண் அழுகிறாள் என்றால் அது பலவீனம் அல்ல — அவள் தாங்க முடியாத அளவு தொடர்ந்து காயப்படுத்தப்பட்டிருக்கிறாள் என்று அர்த்தம்.
அவளின் உடை காரணம் அல்ல.
அவளின் நேரம் காரணம் அல்ல.
அவளின் நடத்தை காரணம் அல்ல.
காரணம் ஒன்றே ஒன்றுதான் — செய்தவனின் மனசாட்சி இல்லாத மனம்.
சட்டம் தப்பிக்க விடலாம்.
சமூகம் மறந்துவிடலாம்.
ஆனால் அவள் மனதில் பதிந்த வடு — என்றும் மறையாது.
இந்த கவிதை அந்த வடுவிற்கு குரல் கொடுக்கிறது.
ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக வாழ வேண்டும் — அது உரிமை, கோரிக்கை அல்ல. 🖤🥀✨
💬 இந்த கவிதை உங்கள் மனதைத் தொட்டிருந்தால் — share பண்ணுங்க, ஒரு பெண்ணின் குரலை உலகம் கேட்கட்டும். 🖤
இந்த வார்த்தைகள் உங்கள் இதயத்தைத் தொட்டிருந்தால்,
Instagram-ல் follow பண்ணுங்க 🖤
@hearts._.in._.harmony
— உணர்வுகளை வார்த்தைகளாக்கும் இடம் ✨🥀
Comments
வரிகளை விட
வலிகளை மட்டும் அதிகம் புரிந்து வரிகளாக அமைத்து விட்டதற்கு 💐💐💐